கிரிக்கெட்

தொடர் தோல்வி எதிரொலி: 2027 உலகக் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா கம்பீர்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் விலகினர்.

இந்திய அணியின் சமீபத்திய தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் இருந்து வருகிறார். முன்னாள் தொடக்க வீரரான அவர் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

கம்பீர் மீது விமர்சனம்

கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஏற்கனவே மோசமான தோல்வியை தழுவியுள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்ட் போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. ஆஸ்திரேலியாவிலும் தோல்வி ஏற்பட்டது. ஆனாலும், அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.

சமீபத்தில் இந்திய அணியின் தோல்வியால் கம்பீர் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அயர்லாந்திடம் டி20 தொடர், இங்கிலாந்திடம் ஒருநாள் மற்றும் டி20 ஓவர் தொடர் ஆகியவற்ரை இழந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 2 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது.

நீக்கப்படுவாரா?

இதனால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2027 உலகக் கோப்பை வரை அவரது பதவி பாதுகாப்பாக இருக்குமா, இருக்காதா என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரது ஓய்வுக்கு பிறகு சுப்மன் கில் தலைமையில் டெஸ்ட் அணி புதிய வீரர்களுடன் பங்கேற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பும்ரா, சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்தால் விலகினார்கள்.

வாய்ப்பு இல்லை

இலங்கை தொடருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இன்னும் 2 தொடரே இருக்கிறது. இதனால் டெஸ்டுக்கு பயிற்சியாளர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே கருதப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் செயல்பாடு சிறப்பாக இல்லாவிட்டாலும் இப்போது அவரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்ப வில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை (ஒருநாள் போட்டி, டி20 போட்டி) பொறுத்த வரை அவர் 2027 உலகக் கோப்பை வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்றே தகவல் தெரிவிக்கிறது.

கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 டிசம்பர் வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.