இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா மேலும் 2 ரன்கள் சேர்த்து 462 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 167 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் 82 ரன்களும், துருவ் ஜுரெல் 51 ரன்களும் சேர்த்தனர்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளும், கேஷரா நுவாந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ, லஹிரு உதாரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 4 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 14 ரன்கிளலும், லஹிரு உதாரா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
5-வது விக்கெட்டுகு்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் சோனால் தினுஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. தனஞ்ஜெயா டி சில்வா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அப்போது 6-வது விக்கெட்டுக்கு சோனல் தினுஷா உடன் நிரோஷன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்த கடும் சிரமப்பட்டனர்.
டிக்வெல்லா 67 பந்திலும், தினுஷா 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். இறுதியாக 236 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. நிரோஷன் டிக்வெல்லா 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இலங்கை அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. கேஷரா நுவாந்தா 2 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 10 ரனகளிலும், லஹிரு குமாரா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார். சோனல் தினுஷா சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ரவிந்தீர ஜடேஜா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
178 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறது.