இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது, மேட்ச்-பிக்சிங்கில் சிக்கினார். இதனால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும், பிசிசிஐ அவர் மீதான தடையை நீக்க மறுத்தது.
இவரது தந்தை வி. சாந்தகுமாரன் நாயர். 89 வயதான இவர், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 9.45 மணிக்கு உயிரிழந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வர வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை வரை, உடல் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது. ஞாயிறு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோதமங்கலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின் 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.
ஸ்ரீசாந்தின் தாயார் டி.என். சாவித்ரிதேவி ஆவார். தீபு என்ற சகோதரனும், நிவேதிதா, திவ்யா ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
43 வயதாகும் ஸ்ரீசாந்த், 2005-ல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும், 2006-ல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அறிமுகம் ஆனார். 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 10 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக கடைசியாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
உலக கோப்பையை வென்ற டி20 மற்றும் ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.