கிரிக்கெட்

IPL 2026 | முதல் நியூசிலாந்து வீரர்... அதிரடி சதம் விளாசியதில் அசத்தல் சாதனை படைத்த ஃபின் ஆலென்

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசினார்.

நியூசிலாந்து பேட்டர் ஃபின் ஆலென் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சதம் விளாசி தனது அணி வெற்றியை உறுதிப்படுத்தினார். நேற்றிரவு நடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஃபின் ஆலென் டெல்லி அணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து சதம் விளாசினார். இந்த சதத்தின் மூலம் ஒரே ஆண்டில் மூன்று டி20 சதங்ங்களை விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய ஃபின் ஆலென் 143 ரன்களை குவித்தார். இதில் 47 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். இதில் 5 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் அடங்கும். முன்னதாக ஃபின் ஆலென் பிக் பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக 53 பந்துகளில் சதம் விளாசனார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசினார்.

ஐ.பி.எல். இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த மூன்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் என்ற பெருமையை ஃபின் ஆலென் பெற்றுள்ளார். இவர் தவிர்த்து ஆண்ட்ரே ரசல் 11 சிக்சர்களும், அதற்கு முன்பு மெக்கல்லம் அதிகபட்சமாக 13 சிக்சர்களும் விளாசினார். நேற்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் மெக்கல்லம், வெங்கடேஷ் அய்யர் மற்றும் சுனில் நரைன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில சதம் விளாசிய கே.கே.ஆர். வீரர்கள் பட்டியலில் ஃபின் ஆலென் இணைந்துள்ளார்.

போட்டியை பொருத்தவரை டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.