இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவை வெளியே போ என்ற வகையில் சைகை காண்பித்ததால் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-யில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 55 ரன்களில் சுருண்டது. 18.1 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தாலும் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி (13), ஷவால் சல்பிகுர் (14) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி, பிரேமா ராவத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் இந்தியா 8.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. இந்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஆட்டத்தின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். 2-வது ஓவரை பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா வீசினார்.
இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷபாலி வர்மா, பவுன்சராக வந்த 3-வது பந்தை எதிர்கொண்டபோது, பாத்திமா சனாவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கேட்ச் பிடித்ததும் வெளியே போ என்ற வகையில் சைகை காட்டினார். இது ஐசிசி வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. நடுவர்களும் ஐசிசி விதிமுறையை மீறியதாக பாத்திமா சனாவுக்கு போட்டிக்கான சம்பளத்தில் 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால், பாத்திமா சனா மீது மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.