கிரிக்கெட்

ஆஷஸ் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்- வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து

கடந்த டெஸ்டில் பேர்ஸ்டோ அவுட் விவகாரம் இங்கிலாந்து அணியை கடுமையாக பாதித்து இருக்கும். இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீட்ஸ்:

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

கடந்த டெஸ்டில் பேர்ஸ்டோ அவுட் விவகாரம் அந்த அணியை கடுமையாக பாதித்து இருக்கும். 2 டெஸ்டிலும் இங்கிலாந்து போராடியே தோற்றது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 1 சதம், 2 அரைசதத்துடன் 300 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல டீவன் சுமித், டிரெவிஸ் ஹெட், கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.