நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரை சதம் கடந்து 51 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், மேத்யூ பிஷர், சோனி பேக்கர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட்36 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் போராடிய மேத்யூ பிஷர் அரை சதமடித்து 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ரூர்கி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 100 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 3வது விக்கெட்டுக்கு இணைந்த ஹென்ரி நிகோல்ஸ், ரச்சின் ரவீந்திரா ஜோடி 161 ரன்கள் சேர்த்தது.
ரச்சின் ரவீந்திரா அரை சதம் கடந்து 76 ரன்னும், டேரில் மிட்செல் 68 ரன்னும் எடுத்தனர். பொறுப்புடன் ஆடிய ஹென்ரி நிகோல்ஸ் சதமடித்து 121 ரன்னில் வெளியேறினார். நாதன் ஸ்மித 38 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 362 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மேத்யூ பிஷர் தலா 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 463 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்குகிறது.