கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய வில் ஜாக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு (செப். 22) தொடங்கிய இந்தப் போட்டி ரிவர்சைடு மைதானத்தில் நடந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து பேட்டிங்:

இங்கிலாந்து அணிக்கு டாம் பாண்டன்- பென் டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டாம் பாண்டன் 12 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் டக்கட் 29 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த ஜோ ரூட் 52 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் கேப்டன் ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி 69 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார்.

விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 33 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து 48.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை:

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 9.1 ஓவரில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் சசிந்து கொலம்பேஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் தொடங்கியது.

இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசங்கா 27 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான கமிந்து மென்டிஸ் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் குசல் மென்டிஸ் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.

இலர் 60 பந்துகளில் 42 ரன்களை எடுத்த போது ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் ரன் குவிக்க தவறினர். இடையில் துனித் வெல்லலகே அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். எனினும், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 37 ஓவர்களில் வெறும் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தொடரில் இங்கிலாந்து முன்னிலை:

இதனால் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய வில் ஜாக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஜோஷ் டங் மற்றும் ரெஹான் அகமது தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT