கிரிக்கெட்

ஹாரி புரூக் அதிரடி சதம்: முதல் டி20 போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது இங்கிலாந்து

2வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் - ஹாரி புரூக் ஜோடி 128 ரன்கள் சேர்த்தது.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இங்கிலாந்தின் சவுதம்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அரை சதம் கடந்து 44 பந்தில் 80 ரன்கள் குவித்தார்.

சதமடித்த ஹாரி புரூக்

ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2வது விக்கெட்டுக்கு பட்லர் - புரூக் ஜோடி 128 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 254 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. ஆனால் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் துனித் வெல்லாலகே மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து வெற்றி

இறுதியில், இலங்கை அணி 19 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து சார்பில் சோனி பாகெர் 3 விக்கெட்டும், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டது.\

இரண்டாவது டி20 போட்டி கார்டிப் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT