கிரிக்கெட்

சங்கக்காராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சில் 8 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தை ரூட் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 325 ரன்களைச் சேர்த்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இலங்கை அணிக்கு 219 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையிலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காராவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 8 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6-வது வீரர் எனும் சங்கக்காராவின் சாதனையை முறியடித்துள்ளார். சங்கக்காரா 12,400 ரன்களுடன் 6-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட், 12,402 ரன்களைக் குவித்து 6=ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.