கிரிக்கெட்

3வது டெஸ்டில் 5 வீரர்கள் அரை சதம்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து சார்பில் ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், டான் லாரன்ஸ், எமிலோ கே மற்றும் ஆலி ராபின்சன் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

133 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

எமிலோ கே, ஹாரி புரூக் அரை சதம்

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஹாரி புரூக் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு156 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும் 3 வீரர்கள் அரை சதம்

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஹாரி புரூக் 70 ரன்னில் அவுட்டானார்.

டான் லாரன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 69 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய ஆலி ராபின்சனும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

பாகிஸ்தான் சார்பில் ரசவுல்லா 4 விக்கெட்டும், முகமது அலி, இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT