கிரிக்கெட்

PSL 2026 | பிஎஸ்எல் தொடரில் வினோதம்... சிவப்பு நிறமாக மாறிய பந்து- மார்னஸ் லெபுசேன் அதிர்ச்சி

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தொடக்க போட்டிகளுக்கு இடையே வெள்ளை நிறப் பந்து திடீரென சிவப்பு நிறமாக மாறியது வீரர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

லாகூர்:

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11-வது சீசன் நேற்று முதல் தொடங்கியது. தொடக்க ஆட்டமே ஒரு வினோதமான சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது.

இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லாகூர் கலாண்டர்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டிகளுக்கு இடையே வெள்ளை நிறப் பந்து திடீரென சிவப்பு நிறமாக மாறியது வீரர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே, ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லெபுசேன் கள நடுவர்களிடம் பந்தைக் காட்டி முறையிட்டார். வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய 'கூக்கபுரா' (Kookaburra) பந்து, அடர் சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியதே இதற்குக் காரணம்.

இது குறித்து லெபுசேன் கூறுகையில், "இரண்டாவது ஓவர் முடிந்ததும் நான் நடுவர்களிடம் கேட்டேன், இங்கே என்ன நடக்கிறது? பந்து சிவப்பாக மாறிவிட்டது. வீரர்களின் உடையில் இருந்துதான் அந்த சாயம் பந்திற்குப் பரவுகிறது என்று நினைக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை" எனத் தெரிவித்தார்.

ஐதராபாத் கிங்ஸ்மேன் அணியின் புதிய சீருடை மற்றும் பேட்களில் பயன்படுத்தப்பட்ட மெரூன் நிறச் சாயம், பந்தில் ஒட்டிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஆட்டத்தின் 15-வது ஓவரில் பந்து பேட்ஸ்மேன்களுக்குத் சரியாகத் தெரியாத அளவுக்கு நிறம் மாறியதால், நடுவர்கள் வேறு வழியின்றி புதிய பந்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பல ரசிகர்கள் இது "பி.எஸ்.எல் வரலாற்றின் முதல் பிங்க் பால் டி20 போட்டி" என கிண்டல் செய்து வருகின்றனர். ஐதராபாத் கிங்ஸ்மேன் அணி நிர்வாகம், அடுத்த போட்டிக்குள் தங்களது சீருடையின் தரத்தை சரிசெய்வதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.