கிரிக்கெட்

துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்

கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது.

துலீப் டிராபி தொடரில் 13 ஆண்டுக்கு பிறகு கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதின. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இஷான் கிஷான் இரட்டை சதம்

அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார்.

தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.

சதத்தை தவறவிட்ட திலக் வர்மா

கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல அணியை விட 372 ரன்கள் பின்தங்கியது தெற்கு மண்டல அணி.

கிழக்கு மண்டல அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டும், ஷமி, குரேஷி, ஷிகர் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து கிழக்கு மண்டல அணி தடுமாறியது.

இஷான் கிஷன் 80

இஷான் கிஷன், ஷிகர் மோகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஷிகர் மோகன் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 80 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு குமார் குஷாக்ரா-குரேஷி ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.

சதமடித்த குரேஷி

இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. குஷாக்ரா 46 ரன்னில் அவுட்டானார். குரேஷி பொறுப்புடன் ஆடி சதம் கடந்தார். அவருக்கு அன்குல் ராய் ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு குஷாக்ரா - அன்குல் ராய் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 388 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. குரேஷி 116 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதன்மூலம் முதல் இன்னிங்சில் லீட் பெற்ற கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது திலக் வர்மாவுக்கும் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT