கிரிக்கெட்

துலீப் கோப்பை இறுதிப் போட்டி சென்னைக்கு மாற்றம் - பி.சி.சி.ஐ. சொன்ன முக்கிய காரணம்

துலீப் கோப்பையின் அனைத்துப் போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

முதன்மை உள்ளூர் போட்டியான துலீப் கோப்பை இறுதிப் போட்டி, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்-இல் இருந்து எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, துலீப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 6 முதல் 10 வரை நடைபெறும் போட்டியை அதிக பார்வையாளர்கள் காண வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 முதல் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்-இல் நடைபெறும்.

பி.சி.சி.ஐ. அறிக்கை:

"2026-27 துலீப் கோப்பையின் இறுதிப் போட்டி, பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்-இல் இருந்து (CoE) சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 முதல் 10 வரை நடைபெறும் இந்த முக்கிய உள்ளூர் போட்டியில் பார்வையாளர்கள் கலந்துகொள்ளவும், இறுதிப் போட்டியை மைதானத்தில் நேரடியாக காணவும் அனுமதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"துலீப் கோப்பையின் மீதமுள்ள போட்டிகள், ஆகஸ்ட் 23 ஆம் தேதி CoE-இல் திட்டமிட்டபடி தொடரும். இதில் கிழக்கு மண்டலம் வடகிழக்கு மண்டலத்தையும், வடக்கு மண்டலம் மேற்கு மண்டலத்தையும் எதிர்கொள்ளும்," என்று அது மேலும் கூறியது.

2026-27 ஆம் ஆண்டுக்கான துலீப் கோப்பை போட்டி தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் பதிப்பிற்காக, இந்த தொடர் அதன் பாரம்பரிய மண்டல வடிவத்திற்கு திரும்பியுள்ளது. ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறும் இந்த தொடரில் போட்டியிடும் ஆறு மண்டல அணிகள் மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் ஆகும்.

முக்கியமான முதல் தரப் போட்டி:

CoE-இல் போட்டிகளை காண அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், இறுதிப் போட்டியை அங்கிருந்து சென்னைக்கு மாற்றும் முடிவு எடுக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்தார்.

துலீப் கோப்பை நமது போட்டி அட்டவணையில் ஒரு முக்கியமான முதல் தரப் போட்டியாகும், மேலும் இது ஒரு வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கிரிக்கெட்டின் தரம் எப்போதும் உயர்வாக இருக்கும். இறுதிப் போட்டியை ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

தொலைக்காட்சி நேரலை:

"CoE-இல் பார்வையாளர்கள் வருகை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ரசிகர்கள் கலந்துகொண்டு அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஓர் இடத்திற்கு இறுதிப் போட்டியை மாற்றுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதினோம்," என்று சைகியா கூறினார்.

"நாங்கள் இந்த தொடரின் ஒளிபரப்பையும் அதிகரித்துள்ளோம். துலீப் கோப்பையின் அனைத்துப் போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும், ஒரு காலிறுதி போட்டி, ஒரு அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டி ஆகியவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.