துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் குஷக்ராவின் அபார ஆட்டத்தால் கிழக்கு மண்டலம் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம்- தெற்கு மண்டலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் கிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய கிழக்கு மண்டல அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் 72 ரன்களும், மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களும் சேர்த்தனர்.
ஷிகர் மோகன் சிறப்பாக விளையாடி 120 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். கேப்டன் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவர் 122 பந்துகளில் சதம் விளாசினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் கிழக்கு மண்டலம் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்திருந்தது. இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குஷக்ரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் குமார் குஷக்ரா 128 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 204 பந்துகளில் 150 ரன்களையும், 270 பந்துகளில் 200 ரன்களையும் கடந்்்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 300 பந்துகளில் 250 ரன்கள் குவித்தார். அவர் 301 பந்துகளில் 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
கிழக்கு மண்டலம் 134.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.