துலீப் டிராபி போட்டியில் மேற்கு மண்டல அணியை 52 ரன் வித்தியாசத்தில் வடக்கு மண்டலம் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
துலீப் டிராபி காலிறுதி ஒன்றில் வடக்கு, மேற்கு மண்டலம் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் அன்ஷுல் கம்போஜ் 60 ரன்னும், ஆயுஷ் பதோனி 51 ரன்னும் எடுத்தனர்.
மேற்கு மண்டலம் சார்பில் தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய மேற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷாம்ஸ் முலானி 52 ரன்னில் அவுட்டானார். முஷீர் கான் 31 ரன் எடுத்தார்.
வடக்கு மண்டல அணி சார்பில் அபித் முஷ்டாக் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
64 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆயுஷ் பதோனி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். நிஷாந்த் சிந்து 44 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
மேற்கு மண்டல அணி சார்பில் தனுஷ் கோட்டியான், ஷாம்ஸ் முலானி 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு மண்டல அணி களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்து 66 ரன் எடுத்தார். முஷீர் கான் தனி ஆளாகப் போராடி 96 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், மேற்கு மண்டல அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வடக்கு மண்டல அணி 52 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வடக்கு மண்டல அணி சார்பில் அபித் முஷ்டாக் 4 விக்கெட்டும், நிஷாந்த் சிந்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.