சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பாபா இந்திரஜித் ருத்ர தாண்டவமாடினார். அவர் 25 பந்தில் 8 சிக்சர், 3 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வி.கே.வினீத் 20 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் 15 பந்தில் 38 ரன் குவித்து அவுட்டானார்.
சேலம் அணி சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கேப்டன் அபிஷேக் மட்டும் அதிரடியாக ஆடி 18 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 15 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் திண்டுக்கல் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.
சேலம் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.