கிரிக்கெட்

கிரிக்கெட் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, பேட்டிங்கை ரசிக்க விரும்புகிறேன்: ஹர்மன்பிரீத் கவுர்

மோசமான பந்துகளை தவறவிடாமல் ரன்களாக மாற்றுவது குறித்தும் பிரதிகாவும் நானும் பேசிக்கொண்டோம்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்து ரசிக்க விரும்புவதாக ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் 91 ரன்களை குவித்த ஹர்மன்பிரீத், அதே அணிக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியில் தனது எட்டாவது சதத்தை அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம், பேட்டராக அணியில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

கிரிக்கெட் மகிழ்ச்சியை தருகிறது:

போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் பேசிய ஹர்மன்பிரீத், "நான் யதார்த்தத்திற்கு நெருக்கமாக வாழ விரும்பும் நபர். இதுதான் தற்போதைய யதார்த்தம், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கிரிக்கெட் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் நான் பேட்டிங்கை ரசித்து வந்துள்ளேன். இப்போதும் நான் பேட்டிங்கை ரசிக்கவே விரும்புகிறேன்.

பேட்டிங் செய்யும்போது, ​​இதை பற்றியெல்லாம் நீங்கள் யோசிப்பதில்லை. ஒரு பேட்டராக, பொறுப்பை உணர்ந்து, சூழலுக்கு ஏற்ப விளையாடவே விரும்புவீர்கள். சூழல் எதுவாக இருந்தாலும், நான் எனது பேட்டிங்கை ரசிக்கவே விரும்புகிறேன்," என்று கூறினார்.

சாதனை முறியடிப்பு:

தொடர்ந்து பேசிய அவர், "இன்று நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாடி கொண்டிருந்தோம், அதற்கு ஏற்றவாறு வித்தியாசமாக செயல்பட வேண்டியிருந்தது. நல்ல பந்துகளை மதித்து விளையாடுவது குறித்தும், மோசமான பந்துகளை தவறவிடாமல் ரன்களாக மாற்றுவது குறித்தும் பிரதிகாவும் நானும் பேசிக்கொண்டோம்," என்று கூறினார்.

இந்த எட்டாவது ஒருநாள் சதத்தின் மூலம், இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை பின்னுக்கு தள்ளி ஹர்மன்பிரீத் கவுர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 14 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT