இந்தியாவில் நடத்தப்படும் பிரான்சைஸ் டி20 லீக்கான ஐபிஎல் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த லீக்கில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு நடத்தினாலும், ஒவ்வொரு அணியும் தனியாரிடம்தான் உள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடைபெறுவது போன்று, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த 8 அணிகளின் உரிமையாளர்கள் தனியார் கிடையாது. அந்தந்த மாநிலத்தின் கிரிக்கெட் சங்கம்தான் உரிமையாளராக இருந்து வருகின்றன.
இந்த நிலையில் பிக் பாஷ் லீக்கை தனியார்மயமாக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒரு அணியின் 100 சதவீதம் பங்குகளையும் தனியார் வாங்க முடியும். தற்போது மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா கைவசம் உள்ளது. இதனால் இந்த அணி முதலாவதாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கான சங்கம், புதிய திட்டம் குறித்து குறிப்பிடத்தகுந்த பிரச்சனை தொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
2027-28 தொடரில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக் அணிகளுக்கு புதிய உரிமையாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். விற்பனை நடைமுறை இந்த வருடம் நடைபெறும் தொடரை எந்த வகையிலும் பாதிக்காது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் தங்களது அணிகளில் உள்ள பங்குகளை எப்போது, எப்படி விற்பது என்பது குறித்து தாங்களே முடிவெடுக்க அனுமதிக்கப்படும். ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளும் தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டுவதாக நம்பப்படுகிறது. ஆனால், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் தற்போதைக்குத் தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை.
சர்வதேச போட்டி அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, சம்பள உச்சவரம்புகள் மற்றும் ஊடக உரிமைகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை நிர்வாக அமைப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் மைக் பெயர்ட் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க, குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொள்ளும். கிளப் பெயர்கள், வண்ணங்கள் மற்றும் பிராண்டிங்கில் செய்யப்படும் எந்த மாற்றங்களுக்கும் ஒப்புதல்கள் தேவைப்படும்.