டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டெல்லியில் வரும் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறுவதால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியது.
உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகிறார்கள். மேலும், கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
எனவே, 13-ம் தேதி நடைபெற உள்ள முதல் டி20 ஆட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு டெல்லி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அட்டவணையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளோ போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லை. திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகி ஒருவர் போட்டியை தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை. நிலைமை சரியாக அமையாவிட்டால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஆட்டம் திங்கட்கிழமைக்கு (14-ம் தேதி) மாற்றப்படலாம் என தெரிவித்தார்.