2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், நேற்று குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
பிர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1:30 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரண்களில் ஆட்டமிழந்த போதிலும், ஸ்மிரிதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மீன்பிரீத் கெளர் ஜோடி சேர்ந்து 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் சிறப்பான பந்து வீச்சு மூலம் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி ஷர்மா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதையடுத்து போட்டிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தீப்தி ஷர்மா, “பெரிய போட்டிகளுக்காகவே கடவுள் என்னைப் படைத்துள்ளார் என்று நான் நினைக்கிறேன்.
குறிப்பாக, நெருக்கடியான சூழ்நிலைகள் எழும்போது, அந்தச் சவால்களை ஏற்றுக்கொண்டு அணிக்காக முன்வருவதை நான் விரும்புகிறேன்.
ஒரு ஓவரில் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் அடுத்த ஓவரில் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
முந்தைய ஓவரில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு, அடுத்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அணியின் செய்தியாக இருந்தது.
இளைஞர்களுக்கு நான் சொல்லும் செய்தி என்னவென்றால், தங்களுக்குப் பலனளித்து வரும் விஷயங்களையே தொடர்ந்து செய்யுங்கள்.
சூழ்நிலைகளைக் கவனியுங்கள், உங்கள் பலங்களை நம்புங்கள், உங்கள் திட்டங்களையும் நம்புங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று கூறினார்.