துபாய்:
6 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான கள ஹாரி 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் தொடர் போட்ஸ்வானா நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் -லெசோதோ அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பிரேசில் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் டுக்கு 202 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய லெசோதோ அணி 6.2 ஒவர்களில் 13 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. 7 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். எக்ஸ்டிரா வகையில் 6 ரன் பெற்றார்கள்.
பிரேசில் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான லாரா கார்டோசோ 3 ஓவர்களில் 2 மெய்டனுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து புதிய சரித்திரம் படைத்தார். இதில் 'ஹாட்ரிக்" விக்கெட்டும் அடங்கும்.
ஒட்டு மொத்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) 9 விக்கெட் வீழ்த்திய முதல் நபர் இவர் தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடந்த ஆண்களுக்கான சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மியான்மருக்கு எதிரான ஆட்டத்தில் பூட்டான் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி 8 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை லாரா கார் டோசோ முறியடித்துள்ளார்.