கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இதற்கிடையே, வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள கிராஸ்வெனார் ஹோட்டலில் பீர், கேம்பெய்ன், சிகரெட் போன்றவற்றை வாங்கியதான பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த பில்லில் கபில் தேவ் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த பில் போலியானது என்றும், அதில் போடப்பட்டுள்ள கபில் தேவ் கையெழுத்தும் போலியானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கீர்த்தி ஆசாத் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய 1983-ம் ஆண்டு இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றிவிழா பில் முற்றிலும் போலியானது.
லண்டனில் உள்ள 'Grosvenor Hotel'-ல் 764.40 பவுண்டுகளுக்கு நடைபெற்ற விருந்துக்கான ரசீது மற்றும் கபில்தேவின் கையெழுத்து போலியாக உருவாக்கப்பட்டது. இந்த ஹோட்டலுக்கு நாங்கள் செல்லவே இல்லை.
லார்ட்ஸ் மைதானத்துக்கு அடுத்து உள்ள 'Westmoreland Hotel'-ல் தான் தங்கியிருந்து வெற்றி விழாவைக் கொண்டாடினோம்.
கபில்தேவின் கையெழுத்தும் இந்த ரசீதில் போலியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி ஆசாத் 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.