இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் உள்ளார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்த இந்திய அணி 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் இரண்டு டி20 உலக கோப்பைகளை வென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
எனினும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றனர். அஸ்வின் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். முகமது ஷமி போன்ற வீரர்கள் ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவருடைய தலைமை தேர்வாளர் பதவி முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் புதிய தேர்வாளர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அக்டோபர் 4-ந்தேதிக்குப் பிறகு அதற்கான செயல்பாடுகளில் இறங்குவோம் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
அதன்படி பார்த்தால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை புதிய தலைமை தேர்வாளர் தேர்வு செய்வார். பார்தீவ் பட்டேல் அல்லது பிரக்யான் ஓஜா ஆகியோரில் ஒருவர் தலைமை தேர்வாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் புதிய தலைமை தேர்வாளராக தேர்வு செய்யப்பட இருப்பருக்கு, கவாஸ்கர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள் உண்மையானால், நியூசிலாந்து தொடருக்கான அணிகள் புதிய தேர்வுக்குழுத் தலைவரின் தலைமையிலேயே தேர்ந்தெடுக்கப்படும். ஐந்து மண்டலங்களிலிருந்தும் தலா ஒருவரை தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கும் நடைமுறையை பிசிசிஐ (BCCI) இன்னும் பின்பற்றி வருவதால், புதிய தலைவர் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார்.
ரஞ்சிக் கோப்பையில் மண்டல வாரியான முறை தற்போது வழக்கத்தில் இல்லையென்றாலும், அந்த ஐந்து மண்டலங்களிலிருந்தும் தேர்வுக்குழு உறுப்பினர்களை நியமிக்கும் முறை மட்டும் இன்னும் தொடர்கிறது.
தேசியத் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பது ஒரு கௌரவம்தான். ஆனால், அதே சமயம் அது விமர்சனங்களுக்கு ஆளாகும் ஒரு பதவியாகவும் இருக்கிறது. நடுவர் பணி, விக்கெட் கீப்பிங் மற்றும் வர்ணனையாளர் பணி ஆகியவற்றைப் போலவே இங்கும், செய்யப்பட்ட ஒன்பது நல்ல விஷயங்கள் மறக்கப்பட்டு, தவறு என்று கருதப்படும் ஒரே ஒரு விஷயம் மட்டும் நூறு மடங்காகப் பெரிதுபடுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும்.
பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், தேர்வுக் குழு தலைவர் மீது மற்ற தேர்வாளர்கள் பல முடிவுகளைத் திணிக்கக்கூடும். ஆனால் ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டியவர் அவரே என்பதால், பழி அவர் மீதே விழுகிறது. அதாவது, குழப்பத்தை விளைவிப்பவர்கள் மற்ற தேர்வாளர்களாக இருக்கலாம், ஆனால் விமர்சனத்திற்கு இலக்காவது தலைவராக இருப்பவர் மட்டுமே.
இக்காலத்தில் அணியை தேர்ந்தெடுப்பதில் கேப்டன் தேர்வாளர்களுடன் இணைகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் முற்காலத்தில், கேப்டன் தேர்வுக் குழுவில் (வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும்) ஒரு உறுப்பினராகச் சேர்க்கப்பட்டிருந்தபோது, சில தேர்வாளர்கள் கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்து, தங்களுக்குப் பிடித்தமான ஊடகவியலாளர்களிடம் ரகசியமாகப் பேசி, அணியில் இடம்பெறாத அல்லது நீக்கப்பட்ட வீரர்களைப் பற்றிய அதிருப்திக்குரிய முடிவுகளுக்குக் கேப்டனையே காரணமாகக் கூறுவது வழக்கமாக இருந்தது.
எனக்கு இது பலமுறை நடந்துள்ளது. இது வேடிக்கையான விஷயம் அல்ல, ஏனெனில் இது சக வீரர்களுடனான நட்பையே கெடுத்திருக்கக்கூடும். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை; ஏனெனில், நான் அவர்களிடம் வெளிப்படையாக இருப்பேன் என்பதையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஊடகங்களுக்குத் தெரிவதற்கு முன்பே அவர்களிடம் அதைச் சொல்லிவிடுவேன் என்பதையும் பெரும்பாலான வீரர்கள் அறிந்திருந்தனர்.
அடுத்த தலைவராக யார் வரப்போகிறார் என்று தெரியவில்லை. அவர் விளையாடிய காலத்தில் எவ்வளவு சிறந்த அல்லது பிரபலமான வீரராக திகழ்ந்தார் என்பது முக்கியமல்ல. பதவிக்காலம் முடிந்து வெளியேறும்போது, தனது பெயருக்குப் பின்னால் உள்ள சாதகமான விஷயங்களை விட, தவறாக ஏதும் கருதப்படும் பாதகமான விஷயங்களே அதிகம் இருப்பதை அவர் உணர்வார்.
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.