இலங்கை சென்றுள்ள இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக திணறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் வரும் 15-ம் தேதி காலேவிலும், 2-வது மற்றும் கடைசி போட்டி 23-ம் தேதி கொழும்பிலும் தொடங்குகிறது.
இதற்கிடையே வீரர்களின் காயத்தால் இந்திய அணி திணறிவருகிறது. காயம் அடைந்த வீரர்களைக் கணக்கிட்டால் 11 பேர் கொண்ட லெவனை உருவாக்க முடியும்.
ஜஸ்பிரீத் பும்ரா (முழங்கால் வீக்கம்), சாய் சுதர்சன் (இடது பெருவிரல் காயம்), ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் (தொடை தசைப்பிடிப்பு) ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், ரஞ்சிக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு ஆகாஷ் தீப் மிக நீண்டகாலமாக விளையாடாமல் இருக்கிறார். அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதேபோல் வெள்ளை பந்து போட்டியில் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைக்கியா முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனை இன்று சந்திக்கிறார்.
லட்சுமணன் பெங்களூரில் உள்ள சென்டர் ஆப் எக்லன்சில் இருக்கும் மறுவாழ்வு மேலாண்மை திட்டத்தின் தலைவராக இருக்கிறார்.
இச்சந்திப்பின் போது தேர்வுக் குழு தலைவர் அகர்கர், பயிற்சியாளர் காம்பீர் ஆகியோர் இருப்பார்களா என தெரியவில்லை. ஆன்லைன் மூலம் அவர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்கள் காயத்தில் இருந்து விரைவில் குணமடைவது தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.