அயலக பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீசுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இளம் கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சியில் கையெழுத்திட்ட மோடி ஆஸ்திரேலியாவின் பிராண்ட் தூதராக செயல்படும் செயற்கை கங்காரூ உருவமான ரூபி தி ரூ உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மோடி, அல்பனீஸ் இருவருமே கிரிக்கெட் பிரியர்கள் ஆவர். எனவே மெல்போர்ன் மைதானத்தில் இரு பிரதமர்களின் வருகை சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
இதனிடையே தலைவர்களின் மெல்போர்ன் மைதான வருகையின் முக்கிய அம்சமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அசத்தல் அறிவிப்பும் வந்துள்ளது.
வழக்கமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற 'பிக் பாஷ் லீக்' (BBL) தொடர் முதல் முறையாக இந்தியாவின் நடைபெறும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வந்துள்ளது.
BBL டி20 2026-27 சீசனின் தொடக்க ஆட்டம், சென்னையில் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மோடி மற்றும் அல்பனீஸ் இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தச் சிறப்புப் போட்டியின் போது, கடைசி ஓவர் முடிவிற்கான அழுத்தமாக இருக்காது என்றும், ஆட்டத்தின் மகிழ்ச்சியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவும் மட்டுமே காணப்படும் என்றும் கூறினார்.
இந்தப் போட்டி சென்னையில் ஒரு மாபெரும் கலாச்சார விழாவாக ஏற்பாடு செய்யப்படும் என்று பிபிஎல் நிர்வாகப் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன் தெரிவித்தார்.
நேற்று பிரதமர் அல்பனீஸுடன் மோடி சந்திக்கையில் இரு நாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தமும் அடங்கும்.