நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியை நியூசிலாந்தும், 2வது போட்டியை வங்கதேசமும் வென்றதால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 105 ரன்கள் குவித்தார். லிட்டன் தாஸ் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 76 ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் வில் ரூர்க் 3 விக்கெட்டும், பென் லிஸ்டர், ஜெய்டன் லெனாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.5 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டீன் பான்ஃகிராப்ட் 75, நிக் கெல்லி 59 ரன்கள் சேர்த்தனர்.
வங்கதேசம் சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 5 விக்கெட் வீழ்த்தினார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதனால் 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.