ஹோட்ஜ்
கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹோட்ஜ் 140 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது.

அமீர் ஜாங்கூ சதம்

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் அமீர் ஜாங்கூ சிறப்பாக விளையாடி 133 ரன்கள் குவித்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 51 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணி சார்பில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஹிரிடோய் 242 ரன்கள் குவிப்பு

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 386 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹிரிடோய் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிராண்டன் கிங் 61 ரன்களும், ஜோஷுவா சில்வா 36 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். கவெம் ஹோட்ஜ் மற்றும் கெவின் விக்ஹாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹோட்ஜ் அபார சதம்

கவெம் ஹோட்ஜ் சதம் அடிக்க, விக்ஹாம் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹோட்ஜ் உடன் அமீர் ஜாங்கூ ஜோ சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஹோட்ஜ் 140 ரன்களுடனும், ஜாங்கூ 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் முன்னிலை

தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து பின்னர், டிக்ளேர் செய்து டார்கெட் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

இந்த போட்டியில் சுமார் 400 ரன்கள் டார்கெட் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற அல்லது போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளதால் தொடரை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT