அபுதாபியில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசம் அணி வெற்றிபெற 272 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஜிம்பாப்வே அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.
3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு கிரெய்க் எர்வின் - பிரெண்டன் டெய்லர் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
இந்த ஜோடி 150 ரன்கள் சேர்த்த நிலையில் பிரெண்டன் டெய்லர் 81 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எர்வின் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், சயீப் ஹாசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்குகிறது.