டாக்காவில் உள்ள மிர்பூர் ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடி பாகிஸ்தான் அணி 2 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்த நிலையில் சான் அவைஸ் 85, அப்துல்லா பாஸல் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3 வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 100.3 ஓவர்களில் 386 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அப்துல்லா பாஸல் 60, கேப்டன் ஷான் மசூத் 9, சவுத் ஷகீல் 0, சல்மான் ஆகா 58, முகமது ரிஸ்வான் 59, நோமன் அலி 2, ஷாகின் ஷா அப்ரிடி 13, ஹசன் அலி 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
வங்கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களை வீழ்த்தியும், தஸ்கின் அகமது, தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
2 வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 27 ரன்கள் முன்னிலையுடன் 3 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது.
மஹ்முதுல் ஹசன் ராய் 2 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடுகிறது.