கிரிக்கெட்

நங்கூரமாய் நின்று இரட்டை சதமடித்த ஹிருதோய்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 386 ரன்னுக்கு ஆல் அவுட்

வங்கதேசத்தின் தவ்ஹித் ஹிருதோய் இரட்டை சதம் விளாசி 243 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தவ்ஹித் ஹிருதோய் இரட்டை சதத்தால் வங்கதேசம் அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அமீர் ஜாங்கூ சதம்

பொறுப்புடன் ஆடிய அமீர் ஜாங்கூ சதமடித்து அசத்தினார். அவர் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த கெவின் விக்காம்-அமீர் ஜாங்கூ ஜோடி 131 ரன்கள் சேர்த்தது. கெவின் விக்காம் அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். கிரீவ்ஸ் அரை சதம் கடந்து 56 ரன்னில் அவுட்டானார்.

வங்கதேசம் அணி சார்பில் ஹசன் மஹ்முது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர்.

ஹிருதோய் இரட்டை சதம்

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தவ்ஹித் ஹிருதோய் நங்கூரமாக நின்று அணியை சரிவிலிருந்து மீட்டார். தனி ஆளாகப் போராடிய அவர் இரட்டை சதமடித்து அசத்தினார்.

8-வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிருதோய்-தைஜுல் இஸ்லாம் ஜோடி 117 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிகன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT