கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட்: 2வது இன்னிங்சில் வங்கதேசம் திணறல்

வெஸ்ட் இண்டீசின் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 6 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

வங்கதேசம் 272 ரன்களுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 105 ரன்னில் அவுட்டானார்.

4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம்-தவ்ஹித் ஹிருதோய் ஜோடி 88 ரன் சேர்த்தது. ஹிருதோய் 42 ரன்னில் வெளியேறினார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிகன் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப், ஜோஷ்வா பிஷப் தலா 2 விக்கெட்டும், ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. ஜான் கேம்ப்பெல் அரைசதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். டேக்நரேன் சந்தர்பால் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் 245 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது, சந்தர்பால் அரை சதம் கடந்து 56 ரன்னில் அவுட்டானார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 46 ரன்னில் வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம் சார்பில் நயீம் ஹாசன் 4 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

27 ரன் முன்னிலை பெற்ற வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே வங்கதேசம் விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

வங்கதேசம் திணறல்

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் வங்கதேசம் அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

வங்கதேசம் அணி 106 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டும், ஜோமல் வாரிகன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில், மீதமுள்ள விக்கெட்களை விரைவில் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் எப்ன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT