வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.
மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்து 65 ரன்னில் அவுட்டானார்.
இதன்மூலம் வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 228 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டு 4 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுசேன் 31 ரன்னில் வெளியேறினார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன் ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 43 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இன்னும் இரண்டு மீதமுள்ள நிலையில், வங்கதேசம் 67 ரன் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 2 விக்கெட் வீழ்த்தினார்.