கிரிக்கெட்

ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்த வங்கதேசம்

வங்கதேசத்தின் தவ்ஹித் ஹிருதோய், லிட்டன் தாஸ் ஆகியோர் சதமடித்து அணியை மீட்டனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 400 ரன்கள் குவித்தது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

டாஸ் வென்ற வங்கதேசம்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மபிஜுல் இஸ்லாம் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொமினுல் ஹக்கும் டக் அவுட்டில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷாண்டோ 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வங்கதேசம் திணறல்

வங்கதேச அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் தமிம் உடன் தவ்ஹித் ஹிருதோய் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. தன்ஜித் ஹசன் தமிம் அரை சதம் கடந்தார்.

4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்த நிலையில் தன்ஜித் ஹசன் 67 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் டக் அவுட்டானார். அப்போது வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.

சரிவிலிருந்து மீட்ட ஹிருதோய், லிட்டன்

அவரை தொடர்ந்து லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. சரிவை நோக்கிச் சென்ற அணியை இந்த ஜோடி திறம்பட போராடி மீட்டது.

சிறப்பாக ஆடிய தவ்ஹித் ஹிருதோய் சதமடித்து அசத்தினார். லிட்டன் தாஸ் அரை சதம் கடந்தார். 6-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் தவ்ஹித் ஹிருதோய் 137 ரன்னில் வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் வங்கதேசம் அணி 84 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. லிட்டன் தாஸ் 92 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய லிட்டன் தாஸ் சதமடித்தார். அவர் 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 101.2 ஓவரில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், டேன் பீட்டர்சன் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT