லாகூர்:
2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடரில் பெஷாவர் சால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட்டதற்காக செய்தியாளர் ஒருவரிடம் கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபர் அசாமின் பேட்டிங் வேகம் மற்றும் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறன் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில், இந்திய வீரர் விராட் கோலியின் 'மேட்ச் பினிஷிங்' திறனுடன் பாபரின் ஆட்டத்தை பத்திரிகையாளர் ஒருவர் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
நீங்களும் விராட் கோலியும் ஒரே மாதிரியான ஷாட்களை விளையாடுகிறீர்கள். ஆனால் கோலி போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கிறார். அந்த திறன் உங்களிடம் குறைவாக உள்ளதாக மக்கள் ஒப்பிடுகிறார்கள். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என அந்த பத்திரிகையாளர் கேட்டார்.
கேள்வி முழுமையாக முடிவதற்குள் குறுக்கிட்ட பாபர், மிகுந்த கோபத்துடன், "இந்த ஒப்பீடுகளை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். இதை இத்துடன் நிறுத்திவிட்டு வேறு கேள்வியை கேளுங்கள். நான் போட்டிகளை முடித்து வைப்பதில்லை என்பது உங்களின் தவறான எண்ணம்" என கடுமையாக பதிலளித்தார்.