கிரிக்கெட்

உங்களை சந்திக்க எங்கு வேண்டுமானாலும் வருவேன் - ரோகித் உடனான சந்திப்பு குறித்து சிஎஸ்கே வீரர் நெகிழ்ச்சி

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தனது 'ஹீரோ' ரோகித் சர்மாவைச் சந்தித்த அனுபவத்தை சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் எளிமையும், அவர் இளம் வீரர்களுக்கு அளிக்கும் ஊக்கமும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தனது 'ஹீரோ' ரோகித் சர்மாவைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு போட்டிக்குப் பிறகுதான், நான் ரோகித் ஷர்மாவை முதன்முறையாகச் சந்தித்தேன். அப்போது சிவமும் அங்கே உடனிருந்தார். நான் எப்போது பேச விரும்பினாலும், தயங்காமல் அவரை அழைக்கலாம் என்று அவர் என்னிடம் கூறினார்.

நான் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது ரோகித் சர்மாவைச் சந்திக்க விரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் வெறும் பதில் மட்டும் அனுப்பாமல், நேரடியாகவே என்னை அலைபேசியில் அழைத்தார்.

நான் மும்பையின் புறநகர் பகுதியான வைராரில் வசிப்பதைக் கேட்டறிந்த ரோகித், விராரிலிருந்து என்னைச் சந்திக்க நீ வருவாயா?" என்று கேட்டார். நான், "ஆம்; உங்களைச் சந்திப்பதற்காக நான் எங்கு வேண்டுமானாலும் வருவேன். எனக்கு உங்களைச் சந்திக்க வேண்டும், அவ்வளவுதான். அவ்வளவு தூரம் பயணம் செய்து வர வேண்டாம் என்றும், வீடியோ காலிலேயே பேசலாம் என்றும் கூறினார்.

நேரில் சந்திக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததால், ரோகித் தனது வீட்டு முகவரியைப் பகிர்ந்தார். அடுத்த நாள் அவரது இல்லத்திற்குச் சென்ற சுமார் 2 மணிநேரம் கிரிக்கெட் மற்றும் ஆட்ட நுணுக்கங்கள் குறித்து பேசினோம். எனது முன்மாதிரி எனக்கு இவ்வளவு நேரம் ஒதுக்கியது ஒரு கனவு போல இருந்தது. அந்த இரண்டு மணிநேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. அது உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது என மாத்ரே கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது, ரோகித் சர்மா தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கி வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.