இங்கிலாந்தில் நடந்து வரும் 10-வது ஐ.சி.சி. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தோல்வியைத் தழுவாமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளன. லீக் ஆட்டம் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து 40 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. இதனால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோபி மோலினெக்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், ஜார்ஜ் வார்ஹாம், கிம் கார்த் உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய பெண்கள் அணி இதுவரை 6 தடவை டி20 உலகக் கோப்பையை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) வென்றுள்ளன. 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி அறிமுக உலகக் கோப்பையை (2009) கைப்பற்றி இருந்தது. 17 ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
நாட் சீவர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் டேனி வியாட், ஹீதர் நைட், சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், பிரையா கெம்ப் உள்ளிட்ட தரமான வீராங்கனைகள் உள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.