கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

322 ரன் குவித்த ஆஸ்திரேலியா

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 33 பந்தில் அரைசதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார்.

அலெக்ஸ் கேரி பொறுப்பான ஆட்டம்

அரை சதமடிப்பார் என எதிர்பார்க்க்கப்பட்ட இளம் வீரர் ஆலிவர் பீக் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் பாஸ்ச் 4 விக்கெட்டும், கோட்ஸீ, லிசார்ட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 323 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பம் முதலே சரிவு ஏற்பட்டது.

போராடிய ரியான் ரிக்கெல்டன்

ரியான் ரிக்கெல்டன் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி 28 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. ரியான் ரிக்கெல்டன் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிஎல்எஸ் கணக்கீட்டின்படி தென் ஆப்பிரிக்க அணி தேவையான ரன்களைவிட மிகவும் பின்தங்கியிருந்தது. இதனால் ஆஸ்திரேலியா 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடரின் முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா, கடைசி போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 2-1 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT