கிரிக்கெட்

டர்பன் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 214 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2வது இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 214 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ரென்ஷா 190 ரன்

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 390 ரன்கள் குவித்தது. ரென்ஷா அபாரமாக விளையாடி 190 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும், ஆன்ரிச் நோர்ஜே 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா 106 ரன் முன்னிலை

அதன்பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலிய அணி 106 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

106 ரன் முன்னிலை பெற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ரென்ஷா, 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தார். மேடின்சன் 48 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு 421 வெற்றி இலக்கு

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 75 ரன்னில் அவுட்டானார். டேவிட் பெடிங்காம் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மார்கோ யான்சென் 35 ரன் சேர்த்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா வெற்றி

இதன்மூலம் 214 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆட்ட நாயகன் விருது மேட் ரென்ஷாவுக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT