கிரிக்கெட்

ஷதாப் கான் போராட்டம் வீண்.. 2-வது ஒருநாள் போட்டியில் 41 ரன்களில் ஆஸி. வெற்றி

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் பந்தில் அலெக்ஸ் கேரி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மேத்யூ ஷார்ட் 15 ரன்னும், லாபுசேன் 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோஷ் இங்கிலீஸ்-கேமரூன் கிரீன் ஜோடி 51 ரன்களை சேர்த்த நிலையில் ஜோஷ் இங்கிலீஸ் அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கேமரூன் கிரீன்-மேட் ரென்ஷா ஜோடி 65 ரன்கள் சேர்த்த நிலையில் கேமரூன் கிரீன் 53 ரன்னில் அவுட்டானார். மேட் ரென்ஷா 43 ரன்னில் வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அராபத் மினாஸ், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சஹிப்சதா பர்ஹான் 3 ரன்னுக்கும், மாஸ் சதாகட் ரன் ஏதும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 16 பந்துகளில் 16 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

பிறகு களமிறங்கிய கசி கோரி 48 பந்துகளில் 37 ரன்களை சேர்த்தார். நிதானமாக ஆடிய இவர் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழக்க அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். எனினும், ஷதாப் கான் மற்றும் அராஃபத் மின்ஹாஸ் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். இதனால், ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்த போதிலும், இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் நம்பிக்கை அளித்தது. எனினும், ஷதாப் கான் 71 ரன்கள் எடுத்த போது எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை பறிக்கொடுக்க மீண்டும் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.

பிறகு அராஃபத் 33 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. 44 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ குஹென்மான், ஆடம் ஜாம்பா மற்றும் தன்வீர் சங்வா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.