மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
குரூப் 1 பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளை வீழ்த்தியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை பெத் மூனி 42 பந்தில் 74 ரன்கள் குவித்தார். ஆஷ்லே கார்ட்னர் அரை சதம் கடந்து 58 ரன்னில் வெளியேறினார். ஜார்ஜியா வேர்ஹாம் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.
3வது விக்கெட்டுக்கு டி லீட், காலிஸ் ஜோடி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்த நிலையில் காலிஸ் 44 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய டி லீட் அரை சதம் கடந்து 56 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா ஆடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகி விருது பெத் மூனிக்கு வழங்கப்பட்டது.