ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என கைப்பற்றியது.
அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வென்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. மேட் ரென்ஷா அதிரடியாக ஆடி 52 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 26 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த நிலையில் தமிம் 30 ரன்னில் அவுட்டானார். சைப் ஹசன் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். பர்வேஸ் ஹொசைன் 36 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
கடைசி கட்டத்தில் தவ்ஹித் ஹிருடோய் போராடி 35 ரன் சேர்த்தார்.
இறுதியில், வங்கதேசம் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரில் 2-0 என கைப்பற்றியது.