தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் யான்சென் அதிரடி பந்துவீச்சில் சிக்கி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 127.1 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் டெம்பா பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 179 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மார்கோ யான்சென் 85 ரன்னும், சைமன் ஹார்பர் 82 ரன்னும் பவுமாவுக்கு உறுதுணையாக நின்றனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நிக் மேடின்சன் டக் அவுட்டானார். ஸ்காட் போலண்ட் 2 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் வெளியேறினர். லபுசேன் 14 ரன்னிலும், ரென்ஷா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் கேரி டக் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 5 விக்கெட்டும், ரபாடா, வியான் முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.