தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் யான்சென் அதிரடி பந்துவீச்சில் சிக்கி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 69 ரன் எடுத்து திணறி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் முதல் நாளில் 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 20 ரன் மட்டுமே எடுத்திருந்தது.
இரண்டாம் நாளில் தென் ஆப்பிரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 97 ரன்களை எடுத்து தத்தளித்தது.
மூன்றாம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் டெம்பா பவுமா தூணாக நின்று ஆடினார். டெம்பா பவுமா உடன் மார்கோ யான்சென் இணைந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து ஆடியது. 7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்து யான்சென் 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் டெம்பா பவுமா நிதானமாக ஆடி சதமடித்து அசத்தினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 127.1 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பவுமா 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நிக் மேடின்சன் டக் அவுட்டானார். ஸ்காட் போலண்ட் 2 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் வெளியேறினர்.
லபுசேன் 14 ரன்னிலும், ரென்ஷா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் கேரி டக் அவுட்டானார்.
இறுதியில், உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட் வீழ்த்தினார்.