இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 185 ரன்களில் சுருண்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அன்ஷுல் கம்போஜ் 10 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2 ஓவர்கள் மெய்டனாக வீசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். அப்போது 82 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ரசிகர்கள் இவர் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இந்த நிலையில் ஒரு மோசமான போட்டி வீரரின் கேரியரை முடிவு செய்து விடாது என்று தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு மோசமான ஆட்டம் ஒரு வீரரின் விளையாட்டு வாழ்க்கையை தீர்மானித்துவிடாது. நான் எப்போதும் பின்பற்றும் எனது செயல்முறையிலேயே கவனம் செலுத்தினேன். ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
உண்மையை சொல்லப்போனால், அது எனக்கு இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தை அளித்தது. நான் எந்தெந்த அம்சங்களில் முன்னேற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவியது. முடிவுகள் எப்போதும் நமக்குச் சாதகமாக இருக்காது.
இத்தகைய விஷயங்களில் (ரசிகர்கள் விமர்சனம்) நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. எனது கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தி, ஒரு பந்துவீச்சாளராக எப்படி மேம்படலாம் என்பதையே பார்க்கிறேன். மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது என்ன சொல்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறையில்லை. எனவே, அது என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
உண்மையில் ஆடுகளம் சீமிங்கிற்கு (Seam) சாதகமாக இருந்தது. ஆனால், சரியான நீளத்தில் (length) மற்றும் சரியான இடங்களில் பந்துவீசுவது மிக முக்கியமாக இருந்தது.
ஆடுகளத்திலிருந்து பந்துக்கு சாதகமான நகர்வை பெற இதுவே ஒரே வழி. சரியான லெந்தில் பந்து வீசத் தவறினால், ரன்களை விட்டுக் கொடுக்க நேரிடும். எனவே, என்னால் முடிந்தவரை சரியான இடங்களில் பந்துவீச முயன்றேன். wobble seam நுட்பம் சிறப்பாகச் செயல்பட்டது, அதைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெற்றேன்.
ஆடுகளத்தில் பந்துக்கு நல்ல சாதகமான சூழல் இருந்ததால், நான் முடிவை பற்றி அதிகம் கவலைப்படவில்லை. இந்தியாவிலும் இது போன்ற சிறிய மைதானங்கள் உள்ளன. எனவே மைதானத்தின் அளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஆடுகளத்தை பார்க்கும்போது, அந்த ஆடுகளத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, மைதானத்தின் அளவைப் பார்க்கக்கூடாது.
அடுத்த போட்டியிலோ அல்லது நான் விளையாடும் எந்த போட்டியிலோ, இதே வேகத்தை தொடரவே விரும்புகிறேன். எனவே, தேவையற்ற எதையும் நினைக்காமல், பந்துவீச்சு, பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என நான் மேம்படுத்த வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.
ஒரு முனையில் ஒருவர் சிறப்பாகப் பந்துவீசும்போது, மறுமுனையில் விக்கெட்டுகள் கிடைக்க வாய்ப்பு உருவாகும். நாங்கள் தொடர்ந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றோம். அவர்கள் (நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்) சிக்கிக்கொண்டால், அந்த நெருக்கடியை நீண்ட நேரம் நீடிக்கச் செய்யவே நாங்கள் திட்டமிட்டோம்.
இவ்வாறு அன்ஷுல் கம்போஜ் தெரிவித்துள்ளார்.