இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருக்கும் அஜித் அகர்கர் அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக பதவி வகித்து வருபவர் அஜித் அகர்கர். ஜூலை 2023-ம் ஆண்டில் பொறுப்பேற்ற அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு காலத்தில், இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. மேலும், சில தொடர்களையும் வென்றுள்ளது.
அஜித் அகர்கரின் பதவிக் காலம் அக்டோபர் 4-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது.
இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும், தேர்வுக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியானது.
அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவரை மாற்றுவது அணியின் எதிர்கால திட்டமிடலைப் பாதிக்கும். எனவே பிசிசிஐ அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அகர்கரின் ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தேர்வுக் குழு தலைவர் பதவியில் தொடரப் போவதில்லை என அஜித் அகர்கர் பிசிசிஐயிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, பிசிசிஐ வேறு ஒரு புதிய தலைமைத் தேர்வாளரைத் தேடும் பணியைத் தொடங்கி உள்ளது.