odi 
கிரிக்கெட்

அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

கடைசி 10 ஓவர்களில் 101 ரன்களைக் குவித்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தது.

அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

நெதர்லாந்து

தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான்.

முதலில் பேட்டிங் இறங்கிய அயர்லாந்து அணியின் ஆட்டக்காரர்களான ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் ஆகிய இருவரையும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஒரே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார்.

பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் 53 ரன்கள் எடுக்க, கர்டிஸ் கேம்பர் 96 ரன்கள் எடுத்தார். இதனால் அயர்லாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

கடைசி 10 ஓவர்களில் 101 ரன்களைக் குவித்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான்

299 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சற்று சறுக்கலாக அமைந்தது.

லியாம் மெக்கார்த்தியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் 22 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் இணைந்த கேப்டன் ரஹ்மத் ஷா மற்றும் செடிகுல்லா அடல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிப் பாதையை உறுதி செய்தனர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செடிகுல்லா அடல் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

ஆனால், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ரஹ்மத் ஷா சதம் கடந்து 143 ரன்களுடன் களத்தில் இருந்தார். அஸ்மத்துல்லா ஒமர்சாய் 14 பந்துகளில் 24 ரன்கள் விளாசினார்.

வெற்றி

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 302 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.