ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 298 ரன்களைக் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது, 3வது மற்றும் 4வது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.
முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 99 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது அயர்லாந்து அணி.
5வது விக்கெட்டுக்கு இணைந்த ஹாரி ஹெக்டார்-கர்டிஸ் காம்பெர் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. ஹெக்டார் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய காம்பெர் அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 96 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். டாக்ரெல் 31 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஒமர்சாய் 3 விக்கெட்டும், கஜான்பர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.