ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
2-ஆவது மற்றும் 3-ஆவது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் களமிறங்கிய இப்ராகிம் ஜட்ரன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
இவருடன் ஆடிய செடிகுல்லா சதம் விளாசினார். ஜட்ரன் 118 பந்துகளில் 107 ரன்கள் (11 பவுண்டரிகள், 1 சிக்சர்), செடிகுல்லா 120 பந்துகளில் 143 ரன்களை (17 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.
2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராகிம் ஜட்ரன் 107 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய செடிகுல்லா அடல் 143 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அயர்லாந்து சார்பில் பிரியன் மெக்டொனவ் 3 விக்கெட்டுகளையும், மார்க் அடைர், கேவின் ஹோய் தலா 2 விக்கெட்டுகளையும், லியாம் மெக்கார்த்தி 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகியது.
கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு தொடக்க வீரரான ஆன்டி பால்பிர்னி அபாரமாக ஆடினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் பால் ஸ்டிர்லிங் 27 ரன்களும், கேட் கார்மைக்கேல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹேரி டெக்டர் நிதானமாக ஆடி 34 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஆன்டி பால்பிர்னி சிறப்பாக ஆடி சதம் விளாசினார். இவர் 119 பந்துகளில் 109 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய குர்டிஸ் கேம்பர் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 46 பந்துகளில் 84 ரன்கள் (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 301 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாமின் அகமதுசாய் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும், கசன்ஃபர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.