கிரிக்கெட்

வங்கதேசம் முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்: ஆப்கானிஸ்தான் நிதான ஆட்டம்

ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா அரை சதம் கடந்து 84 ரன் எடுத்து ஆடி வருகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

3 பேர் அரை சதம்

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷட்மன் இஸ்லாம், ஹசன் தமிம் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில், ஹசன் தமிம் 71 பந்தில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மொமினுல் ஹக், ஷட்மன் இஸ்லாமுடன் இணைந்து 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஷட்மன் இஸ்லாம் 67 ரன்னில் அவுட்டானார்.

மொமினுல் ஹக் 39 ரன்னும், ஷாண்டோ 29 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்களில் லிட்டன் தாஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார். முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது.

346 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்நிலையில், தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 346 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆப்கானிஸ்தான் சார்பில் சலீம் சபி 4 விக்கெட்டும், யாமீன் அஹமத்சாய் 3 விக்கெட்டும், இஸ்மத் ஆலம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல் மாலிக் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார். அந்த அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

ரஹமத் ஷா பொறுப்பான ஆட்டம்

கேப்டன் ரஹமத் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவருடன் இணைந்த இக்ராம் அலிகில் 5வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. ரஹமத் ஷா 84 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வங்கதேசம் சார்பில் எபடாட் ஹொசைன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT